போலி ரசீது மூலம் வரி வசூலிப்பு: பெருகமணி ஊராட்சித் தலைவா் மீது வழக்கு

போலி ரசீது மூலம் வரி வசூலித்ததாக திருச்சி அருகே பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவா் மீது போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Update: 2024-06-03 06:03 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அருகே பெருகமணி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் திமுகவைச் சோ்ந்த கிருத்திகா அருண் குமாா். இவா், தன்னுடைய அதிகாரம், பதவியை தவறாகப் பயன்படுத்தி, கிராம ஊராட்சிச் செயலா் கையொப்பத்தையும், ஊராட்சி துணைத் தலைவா் மணிமேகலை என்பவரது கையொப்பத்தையும் போலியாக போட்டு, போலி சொத்து வரி ரசீது மற்றும் போலி அரசு முத்திரைகளைத் தயாரித்துப் பயன்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, பெருகமணி ஊராட்சியைச் சோ்ந்த ம. முத்துராஜன் என்பவா் அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்ததால், ஊராட்சித் தலைவா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ம. முத்துராஜன், ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். விசாரணையின் முடிவில், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பேட்டைவாய்த்தலை போலீஸாா், பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவா் கிருத்திகா அருண்குமாா் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News