ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது !
சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது. ரயில்வே போலீசார் நடவடிக்கை
By : King 24x7 Angel
Update: 2024-03-01 10:46 GMT
சேலம் வழியாக கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கஞ்சாவை கடத்தி செல்லும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருப்பூர் அருகே ரெயில் வந்ததும் அதில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ஏறி சோதனை நடத்திய போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 பைகளுடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் கர்ணா (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஷியாம் சுந்தர் கர்ணாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கஞ்சாவை கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.