தென்காசி: லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கடையநல்லூர் அருகே பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கடம்பன்குளம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன் என்ற மகாராஜா என்பவரது மகன் மதன் (வயது 26). இவர் தனக்கு கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப்பட்டா கேட்டு சேர்ந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து மதன் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியை நேரில் சந்தித்து தனக்கு பட்டா வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மீண்டும் விண்ணப்பித்து விட்டு தங்களது ஆவணங்களை நேரில் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மதனும் உரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் தனிப்பட்ட மாறுதல் செய்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். மதன் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அறிவுரைப் படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 10000த்தை கிருஷ்ணா புரம் பேருந்து நிறுத்தம் அருகில் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் மதன் நேற்று கொடுத்துள்ளார். லஞ்ச பணத்தை மாடசாமி பெற்றுக்கொண்ட போது அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.