சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்
வளர்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளரை, மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தார். அப்போது, ஒரத்தநாடு பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடம், பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், கட்டண விகிதங்கள் குறிப்பிடப்படாமலும், ஆர்.வி. நகர் பூங்கா புல் பூண்டுகள் வளர்ந்து அசுத்தமாகவும் இருந்தது. விளையாட்டு உபகரணங்கள் மிகவும் துருப்பிடித்த நிலையில் இருந்தன. மேலும், பழுதுபட்ட உபகரணங்களை உடனடியாகச் சீர் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டும், அதை செயல்படுத்தாத ஒரத்தநாடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆர்.செந்தில்குமரகுருவை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.