தை அமாவாசை; கன்னியாகுமரியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டைய தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள்.
அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
தை அமாவாசையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.