தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 42 கோடியில் புற்றுநோய் வளாகம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.42 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் வளாகம் கட்டும் பணி 6 மாதங்களில் நிறைவடையும் என மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தார்.
உலக புற்றுநோய் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாமைத் தொடங்கி வைத்த மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்ததாவது: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்களை அதிகமாகப் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக உள்ளது. இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 153 பேர் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்தனர். அனைத்து விதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,242 நோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ. 42 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புற்றுநோய் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி 6 மாதங்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார் பாலாஜிநாதன். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். மருதுதுரை, புற்றுநோய் கதிர்வீச்சுத் துறைத் தலைவர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.