வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு
வேர் வழி பூச்சிக் கொல்லி மருந்து செலுத்தும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி நடைபெற்றது.
இதில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி பூச்சியியல் துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் என்.முத்துக்குமரன் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், இயற்கை வழி பூச்சிக் கட்டுப்பாடு, உயிரியல் முறை பூச்சி மேலாண்மை மற்றும் வேர்வழி பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தும் முறைகளை செய்முறை வகுப்பு மூலம் விளக்கமளித்தார்.
தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பற்றி நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.விஜயபிரியா விளக்கமளித்தார். மேலும் சோப்பு தயாரிப்பு பற்றிய செய்முறை வகுப்பும், தேங்காய் எண்ணெய் மற்றும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மற்றும் தென்னைக்கு நுண்ணுயிர் உரம் இடும் முறையும், தென்னை நார் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். நிறைவாக மாணவிகள் குழு தலைவி எம்.ப்ரீத்தி நன்றி கூறுகையில், "இத்தொழில் நுட்பங்களை அடுத்து வரும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் எடுத்துரைப்போம்" என கூறினார்.