பஸ்சை சிறை பிடித்து மக்கள் மறியல்
பஸ்சை சிறை பிடித்து மக்கள் மறியல்
Update: 2024-04-30 04:45 GMT
சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போர்வெல் அமைத்தும் ஊராட்சி நிர்வாகம் மோட்டார் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் வயல்வெளி பகுதிக்கு சென்று கிராம மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7:00 மணியளவில், திம்மாபுரம் வழியாக சென்ற இரண்டு அரசு பஸ்களை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் உடனடியாக மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து 10:00 மணியளவில் கிராம மக்கள் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர். தொடர்ந்து டிராக்டர் குடிநீர் டேங்க் மூலம் கிராமத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.