சுசீந்திரத்தில் வணிக வளாகம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டல்
கன்னியாகுமரி மாவட்டம், தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே வணிக வளாகம் அமைக்க முதல்வர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே வணிக வளாகம் அமைக்க கோரிக்கை இருந்து வந்தது. கோவில் எதிரே உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிதாக வணிக வளாக மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்ட 1 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னையிலிருந்து காணொளி காட்சி வழியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம் பி, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வணிகவளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டிடம் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என அமைய இருக்கிறது. தரைத்தளம், முதல் தளம் முறையே 2 ஆயிரத்து 450 சதுர அடியிலும், இரண்டாம் தளம் ஆயிரத்து இருநூறு சதுர அடியிலும் அமைய உள்ளது என அதிகாரிகள் கூறினார்கள்.