நாகர்கோவில் வந்த விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம் பயணிகள் பீதி !
பணகுடி ரயில் நிலையத்தில் சிக்னல் வழங்கபடாத நிலையில் அந்த ரயில் நிலையத்தில் பெங்களூரு விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 11:29 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நெல்லை வழியாக பெங்களூருக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் இரவு 7. 15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் நாகர்கோவிலுக்கு தினமும் காலை 7.30 மணி அளவில் வந்து சேரும். இந்த ரயிலில் கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரக்கூடிய இந்த எக்ஸ்ப்ரஸ் ரயில் இன்று காலை நெல்லை ரயில் நிலையத்திலிருந்து வழக்கம்போல் புறப்பட்டது. வள்ளியூர் தாண்டி நாகர்கோவில் நோக்கி கிளம்பிக் கொண்டிருக்கும் போது ரயிலில் ஏதோ பிரச்சனை என்று அங்கிருந்து ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் அது குறித்து வடக்கு பணகுடி ரயில் நிலையத்திற்கும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் இஞ்சின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருக்கும் கிடைத்த தகவல் அடுத்து பணகுடி ரயில் நிலையத்தில் சிக்னல் வழங்கப்படவில்லை. இதனால் அந்த ரயில் நிலையத்தில் பெங்களூரு விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயிலின் கார்டு தனது பெட்டியை விட்டு இறங்கி ஒவ்வொரு பெட்டியாக நடந்து சென்று சோதனை செய்தபடி சென்றார். மேலும் பணகுடி ரயில் நிலைய ஊழியர்களும் ரயில் பெட்டியலின் சக்கரங்கள் இருக்கும் பகுதியை பார்வையிட்டபடி சென்றனர். நிறுத்தமில்லாத ரயில் நிலையத்தில் திடீரென ரயில் நிறுத்தியதால் பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பயணிகள் விசாரித்த போது ரயில்வே ஊழியர்கள் எதுவுமே தகவல் வெளியிடவில்லை. இது பயணிகள் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அனைத்து பெட்டிகளும் சோதனை செய்த பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வடக்கு பணகுடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதன் பிறகு பயணிகள் நிம்மதி அடைந்தனர்.