புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் 130 காளைகள், 76 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-02-25 08:14 GMT

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாசி மகப் பெருவிழாவையொட்டி உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு வயல் வெளிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் கட்டு மாடுகளாக நிறுத்தி வைத்தனர். அரளிப்பாறை கீழ் பகுதியில் தொழுவின் முன் வாடிவாசல் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டதில் 130 காளைகள் தொழுவில் அடைக்கப்பட்டன,

மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் 76 பேர் களமிறக்கப்பட்டனர். ஐந்துநிலை நாட்டார்கள் ஜவுளி எடுத்து அரளிப்பாறை மலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படடு தொழுவில் உள்ள கோவில் காளைகளுக்கு வேட்டி வழங்கி மரியாதை செய்தனர். தொடர்ந்து முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள மஞசுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதே நேரத்தில் ஆங்காங்கே வயல் வெளிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்படடன. இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு தொழு அருகிலேயே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவர் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள், முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த நத்தம் வத்திபட்டி ஜெயபால் (20), நெற்குப்பை மெய்யர் (17), ஏனாதி வினோத்குமார் (20), சிங்கம்புணரி பாண்டி (20), பிரான்மலை கருப்பையா (40) உள்பட 13 பேர் மேல்சிக்சைக்காக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அதே போன்று சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஸ்குமார் தலைமையில் டி.எஸ்.பி ஆத்மநாதன் தலைமையில் 151 போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News