பயணிகளுக்கு தொல்லை தந்த குரங்கு - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை
சேலம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை அளித்து வந்த குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் நிலையத்துக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இந்த ரெயில் நிலையத்தில் குரங்கு ஒன்று பயணிகளுக்கு தொந்தரவு செய்து வந்தது. அதாவது பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கடிக்க பாய்வது, கையில் வைத்திருக்கும் பைகள் மற்றும் தின்பண்டங்களை பிடுங்குவது உள்ளிட்ட அட்டகாசத்தில் அந்த குரங்கு ஈடுபட்டு வந்தது.
மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கடைகளிலும் புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகள் இந்த குரங்கால் அவதியுற்றனர். இதுகுறித்து சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகனுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் பெருமாள், அசோக்குமார் ஆகியோர் மற்றும் குரங்கு பிடிக்கும் குழுவினர் இணைந்து நேற்று ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கூண்டு ஒன்று வைத்தனர். அதற்குள் குரங்குக்கு பிடித்த உணவுகள் வைக்கப்பட்டன. அதை சாப்பிடுவதற்காக கூண்டுக்குள் சென்ற போது குரங்கு சிக்கியது. இதையடுத்து அந்த குரங்கை வனத்துறையினர் மீட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று விட்டனர். குரங்கு பிடிபட்டதால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.