ஆண்டிபட்டி கோட்டையில் காய்கறிகளை திருடிய மர்மநபர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே தோட்டக்கலை பராமரிப்புத்துறை சார்பில் வழங்கப்பட்ட தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் மாற்றுத்திறனாளி கோபால். இவருக்கு நாள்தோறும் திண்டுக்கல் பகுதியில் இருந்து பேருந்தில் விற்பனைக்கு தேவையான காய்கறிகளை கொண்டு வந்து ஆண்டிப்பட்டி கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி வைப்பது வழக்கம்.
இன்றும் வழக்கம் போல காலை 6: 10- மணிக்கு பேருந்தில் இருந்து வந்த காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு சென்று விட்டனர். வழக்கம் போல காய்கறிகளை எடுக்கச் செல்லும்போது அங்கு மூட்டைகள் இல்லாதது கண்டு திடுக்கிட்டு போனார் கோபால். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால், காய்கறி மூட்டைகள் மாயமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்த போது, ஒரு அடையாளம் தெரியாத இளைஞர் ஸ்கூட்டி போன்ற ஒரு வாகனத்தில் இறக்கி வைக்கப்பட்ட காய்கறிகளை களவாடி செல்வது பதிவாகியுள்ளது. மேலும், அந்த நபர் களவாடிச் சென்ற காய்கறிகளை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள சுங்க கட்டண சாவடியை தாண்டி செல்வதும், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக கோபால் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.