வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் !

சேலத்தில் மதுபோதையில் வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2024-04-08 04:59 GMT

தற்கொலை மிரட்டல்

சேலம் அஸ்தம்பட்டி அய்யந்திருமாளிகை கம்பர் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 34). மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் அய்யத்திருமாளிகை பகுதியில் இருந்து கோரிமேட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மதன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினார். பின்னர் அவரிடம் விசாரித்ததில் மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் மதன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், போலீசாரின் செயலை கண்டித்து கோரிமேடு போலீஸ் பூத் பின்புறம் உள்ள வயர்லெஸ் கோபுரம் மீது ஏறி கீழே குதித்துவிடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை விடுவித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்றும், அப்படி இல்லாவிட்டால் கீழே குதித்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் அவரிடம் மோட்டார் சைக்கிள் ஒப்படைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து வயர்லெஸ் கோபுரத்தில் இருந்து மதன் கீழே இறங்கினார். பின்னர் அவரது மனைவி பிரியாவை போலீசார் வரவழைத்து அவரிடம் மோட்டார் சைக்கிளை போலீசார் ஒப்படைத்தனர். மேலும், மதுபோதையில் இருந்த மதனிடம் உரிய அறிவுரை வழங்கி வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News