புது தானிய வரத்தால் மளிகை பொருள் விலை குறைவு
சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை, லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு மளிகை பொருட்கள் அதிகளவு வர தொடங்கியதால் விலை குறைந்துள்ளது.
இந்தியாவில் மும்பை, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு, சீரகம், மிளகு, கசகசா, சோம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை, கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் பொருட்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிக்கைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து புது தானியங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி வட மாநிலங்களில் இருந்து நடப்பாண்டில் புதிய மளிகை பொருட்கள் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது குடோன்களில் சேமித்து வைத்திருக்கும் பொருட்களை மொத்த வியாபாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு மளிகை பொருட்கள் அதிகளவு வர தொடங்கியது.
இதனால், பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை மளிகை மொத்த வியாபாரிகள் கூறியதாவது,வட மாநிலங்களில் கைவசம் குடோன்களில் இருப்பில் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் கடந்த சில நாட்களாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் காரணமாக பருப்பு வகைகள், மிளகு, சோம்பு, வெந்தயம், பட்டை உள்ளிட்ட பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பிடுகையில் தற்போது விலை குறைந்துள்ளது.
அதாவது கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிலோ ரூ.165 வரை விற்ற துவரம் பருப்பு தற்போது கிலோ கிலோ ரூ.145-க்கும், ரூ.120-க்கு விற்ற அவரை ரூ.110-க்கும், ரூ.1,300-க்கு விற்ற கசகசா ரூ.1,200-க்கும், ரூ.300-க்கு விற்ற பட்டை ரூ.250-க்கும், ரூ.1,100-க்கு விற்ற லவங்கம் ரூ.1,000-க்கும், ரூ.700-க்கு விற்ற மிளகு ரூ.600-க்கும், ரூ.750-க்கு விற்ற சீரகம் ரூ.550-க்கும், ரூ.550-க்கு விற்ற சோம்பு ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.