யானை வழிதடத்தை தன்னிச்சையாக தேர்வு செய்த வனத்துறை – பொதுமக்கள் குற்றசாட்டு
வனத்துறை தேர்வு செய்த வழிதடங்களை நடைமுறை படுத்தினால் கொடைக்கானல் மலைப்பகுதி அழிந்து விடும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை உயர் நீதி மன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை வழிதடங்கள் குறித்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை தேர்வு செய்து ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது,இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட குதிரையாறு முதல் கூக்கால்,ஆணைகிரி சோலை,பாலாறு அஞ்சுவீடு,சிறுவாட்டு காடு முதல் ஆசாரி பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் யானை வழிதடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த பகுதிகள் குறித்து விவசாயிகளோ அல்லது பொதுமக்களிடையே கருத்து கேட்காமல் தன்னிச்சையாக வனத்துறை செயல்பட்டு தேர்வு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்,
மேலும் இந்த வழி தடங்களை அமுல் படுத்தினால் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர், மேலும் இது குறித்து மத்திய,மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களையும் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்,இந்த யானை வழிதடங்களை தேர்வு செய்தது அனைவருக்கும் தெரியாமல் மறைமுகமாக வனத்துறை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்,
மேலும் மேல்மலை,கீழ்மலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள கூட்டம் விவசாய நிலங்களுக்கும்,குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுவதை தடுக்க வனத்துறையினர் அகழி வெட்டிய நிலையில்,இந்த பகுதிகளில் எதன் அடிப்படையில் இப்பகுதி யானை வழிதடங்கள் என்று கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சிவராமிடம் மனு அளிக்க விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.