சட்டவிரோதமாக செயல்பட்டும் கல்குவாரிகள், தூர இடைவெளியை அளவீடு செய்ய கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கோக்கலை கிராமத்தில் சட்டவிரோதத்திற்கு செயல்பட்டுவரும் கல்குவாரிகள், கிரஷர்கள் தூர இடைவெளி அளவீடு செய்துதரக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2024-01-05 01:46 GMT

மக்கள் உண்ணாவிரத போராட்டம்

எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை பஞ்சாயத்து, எளையாம்பாளையம் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டும், குடியிருப்புகள் விரிசலடைந்தும் மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டு வருகின்றனர். இக்குவாரிகள் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் செயல்படாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த கல்குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக கிராம மக்கள் கூறி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இருந்தனர்.

இதில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டத்திற்கு உட்பட்ட அளவுக்கு குவாரிகளில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, குடியிருப்புகள் இருக்கின்ற இடங்களில் குவாரிகள் செயல்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த் துறையினர் உரிய அளவீடு செய்தபின்னரே அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதுசம்மந்தமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி டி.எஸ்.பி.,இமயவரம்பன், நேரில் வந்து 45 நாட்களுக்குள் அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது 85 நாட்களாகியும் எந்த அளவீடும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், உடனடியாக உரிய அளவீட்டினை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று, மீண்டும் கோக்கலை கிராம மக்கள் போராட்டகுழு தலைவர் பழனிவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள் பூசன், செந்தில்குமார், தமிழ்நாடு விவசாய சங்க நிறுவனர் ஈசன், முருகசாமி, நாமக்கல் புறநகர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் பெரியசாமி, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ரங்கசாமி, கவுன்சிலர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு வந்த திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த் போராட்டகுழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 6ம்தேதி அளவீடுசெய்து தருவதாக உறுதியளித்ததின்பேரில், மக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News