உயிரிழந்த மாணவர்களின் உடல்களை நள்ளிரவில் மீட்கும் காட்சி.
கரூர் அருகே விவசாய கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை நள்ளிரவில் தீயணைப்பு துறையினர் மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை காலம் விடுமுறை விட்டபோது, மாவட்ட நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் குழந்தைகள் நீர் நிலைகளில் குளிக்கும்போது ஏற்படும் விரும்பத்தகாத செயல்களை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆயினும்,கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் வயது 12, ஸ்ரீதர் மகன் விஷ்ணு 11, இளங்கோ மகன் மாரிமுத்து வயது 11 ஆகிய மூன்று பேரும் குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
குளிப்பதற்காக உடைகளை களைத்து கிணற்று மேட்டில் வைத்துள்ளனர். மாணவர்களை காணாத பெற்றோர்கள் நேற்று இரவு வரை தேடிய போது, கிணற்றின் அருகில் கிடைத்த உடைகளை கண்டு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவு 1-மணி அளவில் தீயணைப்பு துறை நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது மூன்று மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். நள்ளிரவிலும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.