பள்ளி மாணவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது . நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, உத்தரவின் பேரில் ராசிபுரம் காவல்துறையுடன் இணைந்து ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா புதுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிய குற்றத்திற்காக இரு மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் என மொத்தம் 50, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர்களின் பெற்றோரை வரவழைத்து இனிமேல் இருசக்கர வாகனத்தை மாணவனுக்கு இயக்க தர மாட்டோம் என எழுதி கையெழுத்து பெற்று அறிவுரை கூறி அனுப்பினார் . பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்குவதை தொடர்ந்து தினந்தோறும் ஆய்வு செய்து வழக்குகள் பதியப்படும் எனவும் பெற்றோர்கள் பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பக்கூடாது எனவும் எச்சரித்தார். மேலும் கடந்த ஆறு மாத காலத்தில் இது போன்ற எட்டு மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்தார்.