வருவாய் துறை போராட்டம் சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு !
உதகமண்டலத்தில் தமிழக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-02-28 09:53 GMT
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்படி நீலகிரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் இன்று முதல் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு போராட்டத்தில் இணைந்துள்ளனர். இன்று ஊட்டி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்பட பல்வேறு வருவாய் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைக்கு செல்லாதால் வெறிச்சோடின. மேலும் ஒரு சில அலுவலகங்களுக்கு வெளியில் பூட்டு போடப்பட்டுள்ளது. இந்த தொடர் போராட்டம் காரணமாக தற்போது சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரித்து அனுப்பும் பணிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் முதல் கண்காணிப்பு அலுவலர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது:- 10 மாதங்களுக்கு முன்னதாக முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிட வேண்டும். 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் செய்ய விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும். முதல் அமைச்சரால் ஆணையிடப்பட்ட பின்பும் காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தொடர் போராட்டத்தால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு சில ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் எங்களை கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.