பழ. நெடுமாறனிடம் திருட்டு - குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரிக்கை
தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறனிடம் ரொக்கம், கைப்பேசியைத் திருடிச் சென்ற குற்றவாளிகளைக் காவல் துறையினர் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்புத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-07-01 08:06 GMT
உலகத் தமிழர் பேரமைப்புத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் ஜூன் 12 ஆம் தேதி முதல் தங்கியுள்ளார். இவர் ஜூன் 22 ஆம் தேதி மாலை தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியைத் திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் துறையினர் மெத்தனமாக இல்லாமல், விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் நிஜாமுதீன்.