வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள் திருட்டு!
கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி லட்சுமிநகரைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுந்தரி தனது இரு மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தரி கதவைப் பூட்டிவிட்டு மகன்களுடன் தூங்கினாராம். பின்னர், நேற்று அதிகாலை எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டினுள் மற்றொரு அறையில் பொருள்கள் சிதறி கிடந்தனவாம். அப்போது பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.1.50 லட்சம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் மற்றும் கை ரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு அங்கு பதிவான விரல்ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சோதனைக்கு விடப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் பாா்வையிட்டு அதில் பதிவான காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனர். வில்லிசேரி கிராமத்தைச் சோ்ந்த 80 சதவீத மக்கள் ராணுவம் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். சுந்தரி உள்பட எஞ்சிய அனைவரும் எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.