தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று இரவு தெப்பத் திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரித்திர பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ஒன்று. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகரும், சுவாமியும் அம்பாளும் அமர்ந்து வீதி உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவிதி உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா உட்பட பல பகுதியிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று 17ஆம் தேதி காலை 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பின்னர் இன்று இரவு 8.30 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் அம்பாளும் தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து திரு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தெப்ப திருவிழா முடிந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.