தனியார் மண்டகப் பணிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை இல்லை
தனியார் மண்டகப் பணிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புகளுக்கு சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது சாதி ரீதியான மண்டகப்படிகளுக்கு தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ் குமார், அருள் முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிகப்பெரிய பாரம்பரிய கொண்டாட்டம், மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். பல லட்ச பக்தர்கள் வருவதால் போதிய வசதி, பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவகாரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால், நீதிமன்றம் எந்த உத்தரவுவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.