நாமக்கல்லில் நாளை முப்பெரும் தேரோட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!
நாமக்கல்லில் முப்பெரும் தேரோட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற உள்ளது.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நரசிம்மர்-ஸ்ரீதேவி பூதேவி, அரங்கநாதர்-ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாண விழா நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் மொய் சமர்ப்பித்தனர். பின்னர் விருந்து உபசரிப்பு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை ) நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு நரசிம்ம ஸ்வாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4:30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ராம ஸ்ரீனிவாசன், ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் திருக்கோயில் அலுவலர்கள்/ பணியாளர்கள் செய்து வருகின்றனர்.