வரிகளைச் செலுத்தாவிட்டால் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு
திருமழிசை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாவிட்டால் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என செயல்அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமழிசை பேரூராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, காலி மனை வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்தி இருக்கிறார்களா என பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் அவ்வப்போது நேரில் சென்று உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்துவதுடன் நோட்டிஸ் வழங்கியும், எச்சரித்தும் வருகின்றனர்.
பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவைகளை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்தாத பட்சத்தில் முதல் கட்டமாக குடிநீர் இணைப்பும், இரண்டாவது கட்டமாக பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும்.
அடுத்த கட்டமாக வரி செலுத்தாதவர்கள் விவரங்களை மின்வாரியத்திற்கு அனுப்பி வைத்து மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் வரும் 25ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த ஏதுவாக வேலை நாட்கள் மட்டுமல்லாது விடுமுறை நாட்களிலும் காலை 8.30 மணி மணி முதல் இரவு 7 மணி வரை வரி வசூல் செய்யும் பணி நடைபெறும் என்றும், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை https://dtp.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம் என பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.