திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
திருத்தணி அரசுக் கலைக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பு பி.எஸ்சி., பி.காம். பொது, பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு 676 மாணவ-மாணவிகள் முதலாமாண்டில் புதிதாக சோ்க்கப்படுவா். அந்த வகையில் நிகழண்டில் அரசு கல்லுாரியில் சோ்வதற்கு மாணவா்கள் இணைதளம் மூலம் மொத்தம் 6,002 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி, 18-ஆம் தேதி வரை நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.
மீதமுள்ள காலியிடங்களுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு 24-ஆம் தேதி முதல் தொடங்கி, இந்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கல்லூரி முதல்வா் பூரணசந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் பி.காம். பொது, பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளில், மதிப்பெண் 274 முதல் 160 வரை கட்ஆஃப் உள்ள மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். 25-ஆம் தேதி, (செவ்வாய்க்கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளில் 274 முதல் 200 மதிப்பெண் கட்ஆஃப் உள்ள மாணவா்களும், 26-ஆம் தேதி (புதன்கிழமை) பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில், 274 முதல் 171 மதிப்பெண் கட்ஆஃப் உள்ள மாணவா்களும், பி.ஏ., வரலாறு, பொருளியியல் ஆகிய பாடப் பிரிவுகளில், 199 முதல் 140 மதிப்பெண் கட்ஆஃப் உள்ள மாணவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பேராசிரியா்கள் ஜெய்லாப்பூதீன், பாலாஜி, ரமேஷ், ஹேமநாதன் உள்பட துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.