திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது என கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கலுக்கு பின் தெரிவித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதி தனது வேட்புமனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலுருமான லட்சுமிபதி-யிடம் அளித்தார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஏ பி சி வி சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். தொகுதியில் எங்கு சென்றாலும் மக்கள் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு அளித்து வரும் சூழ்நிலை உள்ளது. இன்று காலை தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டபோது மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது. என கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்