வழக்கறிஞரை தாக்கியவர்கள் குடும்பத்துடன் கைது
வழக்கறிஞரை தாக்கியவர்களை குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் பெண்களை குண்டுகட்டாக தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 60, இவர் கடந்த, 12 வருடங்களுக்கு முன் தன்னுடைய நிலத்தை இதேப் பகுதியை சேர்ந்த மாணிக்கத்திற்கு, 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க ஒப்பந்தம் செய்து, 70 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நாட்களில் கிரயம் செய்ய மாணிக்கம் அழைத்தபோது, ராமசாமி கிரயம் செய்து தர வரவில்லை. இதையடுத்து மாணிக்கம் நீதிமன்றத்தில், 10 ஆயிரத்தை செலுத்தி நீதி மன்றம் மூலம் கிரயம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமசாமி மற்றும் மாணிக்கத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 21ம் தேதி காலை மாணிக்கத்தின் வக்கீல் பாலாஜி அலுவலகத்தில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ராமசாமி மற்றும் அவரது மகள்கள் ரம்யா, 30, செளம்யா, 25, இவர்களின் நண்பர் சதீஷ், ஆகியோர் பாலாஜியை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ராமசாமி, ரம்யா, செளம்யா, சதீஷ் ஆகியோரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். ராமசாமி மற்றும் அவரது மகள் செளம்யா, ரம்யா ஆகியோர் போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வக்கீலை தாக்குவதாக தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ராமசாமி குடும்பத்தை விலக்கி விட்டனர்.
ஆனால், அவர்கள் போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வக்கீல் அலுவலகத்தில் இருந்து நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேசன் கூட்டி வந்தனர். அங்கும் அவர்கள் சத்தம் போட்டு கத்தவே பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அடம் பிடிக்கும் பெண்களை குண்டுகட்டாக பெண் போலீஸ் தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.