வேதகிரீஸ்வரர் கோவிலில் திருத்தேர் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-21 14:09 GMT
வேதகிரீஸ்வரர் கோவிலில் திருத்தேர் திருவிழா

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. அதன் முக்கிய உற்சவங்களில், 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா குறிப்பிடத்தக்கது. இவ்விழா, ஏப்., 14ம் தேதி துவங்கி, தினமும், காலை, இரவு என, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமியர் வீதியுலா செல்கின்றனர். மூன்றாம் நாளான, ஏப்.,16ம் தேதி, 63 நாயன்மார்கள் மற்றும் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட பிற சுவாமியர் கிரிவலம் சென்றனர்.ஏழாம் நாளான நேற்று, சுவாமியர், தனித்தனி திருத்தேர்களில், கோலாகலமாக வீதியுலா சென்றனர்.

பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், காலையில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, காலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு செய்யப்பட்டது: பின், அலங்கார சுவாமியர், 6:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் வலம் வந்து, கிழக்கு ராஜகோபுரம் பகுதி வழியே கடந்து, அவரவர் திருத்தேரில் எழுந்தருளினர்.

அவர்களுக்கு பூஜை நடத்திய பின், முதலாவதாக 6:30 மணிக்கு விநாயகர், அவரைத் தொடர்ந்து, 6:50 மணிக்கு வேதகிரீஸ்வரர், அடுத்து திரிபுரசுந்தரி அம்மன், பிற சுவாமியர் புறப்பட்டனர். மங்கல, கயிலாய வாத்தியங்கள் இசைத்து, பக்தர்கள் ஓம் நமசிவாய சிவனே போற்றி என முழங்கி, வடம் பிடித்து இழுத்தனர். மேட்டுத் தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் வீதி, கவரை தெரு ஆகிய பகுதிகள் வழியே கடந்து சென்ற தேர், பகல் 1:20 மணிக்கு, நிலையை அடைந்தனர். கோவில் செயல் அலுவலர் புவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News