ஸ்ரீபெரும்புதுாரில் தமாக பிரச்சாரம்
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் பகுதிகளில் நேற்று, வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தற்போது எம்.பி.,யாக உள்ள டி.ஆர்.பாலு, தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர். வெற்றி பெற்றவுடன், மக்களை சந்திப்பதே கிடையாது. எம்.பி., நிதியில் இருந்து, நடுவீரப்பட்டு பகுதிக்கு, அவர் எந்த பணியும் செய்யவில்லை. ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, பாதாள சாக்கடை திட்டம் மற்றும் செம்பரம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம், 2013ல் துவங்கியது. கடந்த 10 ஆண்டுகள் ஆகியும், இத்திட்டங்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என, கடந்த தேர்தலின் போது, டி.ஆர்.பாலு வாக்குறுதி அளித்தார். இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோல், ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இத்தொகுதியில், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்த டி.ஆர்.பாலு, இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலில் நான் வெற்றிப் பெற்றால், ஸ்ரீபெரும்புதுாருக்கு ரயில் போக்குவரத்து மற்றும் மேம்பாலம் கொண்டு வருவேன். பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் ஒரத்துார் நீர்த்தேக்க திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டு வருவேன். பிரசித்தி பெற்ற மாங்காடு கோவிலுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, மாங்காடில் பேருந்து நிலையம் கொண்டு வருவேன்.