டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பயிற்சி வகுப்பு - ஆட்சியர் கற்பகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2&2Aக்கான பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கவுள்ளதால் விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது TNPSC 2024-ம் ஆண்டு, ஆண்டு திட்ட நிரலில் TNPSC GROUP II & IIA தேர்வுக்கான 14 செப்டம்பர் 2024 தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 28.06.2024 முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது.
இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மேலும், திறனறி பலகை வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள், பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் ஆகியன இப்பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களாகும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.