டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தள்ளி வைக்க எம்எல்ஏ கோரிக்கை

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-01 12:54 GMT

கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்கள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

அதாவது, 6, 7-ந் தேதிகளில் நடக்க உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க அரசு முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. பெங்களூரு, மும்பை, டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியில் எங்களது கட்சி சார்பில் கலந்து கொண்டோம். அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, அது குறித்த அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். அதேபோல், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன் அடையும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் பானை சேர்க்கப்பட்டால் வரவேற்போம்.

தமிழக கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். நல்லது நடக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்கள் முடக்காத நிலை ஏற்பட வேண்டும். தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியை போதிய அளவு தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

ஆனால் அவர்கள் நிதியை தராமல் அரசியல் பேசுகிறார்கள். உண்மை நிலையை புரிந்து கொண்டு நிதியை ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags:    

Similar News