திருப்பூரில் மழைக்காலத்தை வரவேற்க... குடையில் ஓவியம்!

முதலிபாளையத்தில் இயங்கி வரும் ஆடை வடிவமைப்பு, பின்னலாடை கல்லூரியில் மழைக்காலத்தை வரவேற்கும் வகையில் குடையில் ஓவியம் வரைந்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 13:02 GMT

மழைக்காலத்தை வரவேற்கும் குடையில் ஓவியம்! திருப்பூர் முதலிபாளையத்தில் இயங்கி வரும்  ஆடை வடிவமைப்பு மற்றும் பின்னலாடை கல்லூரியில் மழைக்காலத்தை வரவேற்கும் விதமாக அப்பேரல் பேஷன் டிசைனிங் பயிலும் 37 மாணவர்கள் குடைகளில் 4 நாட்களாக  அக்ரிலிக் பெயிண்ட் கொண்டு குடையில் ஓவியம் வரைந்து குடையின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு காட்சி படுத்தியுள்ளனர்.

வெண்கொற்றை குடையின் கீழ் ஆட்சி நடத்திய பண்டைய தமிழர்கள் என்ற வரிகளுக்கு இணங்க இவர்களின் குடை ஓவியம் பல வித எண்ணற்ற நிகழ்வுகளையும், வரலாற்றையும், பண்பாடு, கலாச்சாரம், சமூக சீர்திருத்த நிகழ்வுகள் என ஓவியத்தை பார்த்தாலே பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.

ஆடைகளின் வரலாற்றை படிக்கும் இந்த மாணவர்கள் இப்போது ஓவியம், சினிமா,நடனம், நாடகம், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம்,கலை, இசை , அரசர்களின் வீரதீர செயல் என அனைத்து வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.   குடை இன்று நேற்று வந்ததல்ல அவை 4000 வருடத்திற்கு முன்பே நடைமுறை வாழ்க்கையில் இருந்து வந்துள்ளது. உயர்ந்த அரசர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த இந்த குடையை 1750 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களுக்கும் வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர் ஆங்கிலேயர்கள்.எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரில் இருந்து வந்துள்ளது. தமிழர்களும் சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்திருப்பதை வரலாறு பறைசாற்றுகின்றன. முற்காலத்தில்  பல்லவ சோழ சிற்ப படைப்புகளில் குடை வடிவம் இருக்கும். குடை மரியாதைக்கு  உரியவரின் பொருளாக பார்க்கப்பட்டது. கொரிய நாடகங்களிலும் குடையின் முக்கியத்துவத்தினை காண முடிகிறது. குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் திமிங்கிலத்தின் எலும்புகளால் உருவாக்கப்பட்டது. மரங்களாலும் கூட குடைகள் வடிவமைக்கப்பட்டன. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வு  வரலாற்றுக்கும்  குடைக்கும் சம்பந்தம் அதிகமாக உள்ளது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் படித்து தெரிந்து தெளிந்து இன்றளவும் அவை எந்த அளவிற்கு பயன்பாட்டில் உள்ளது என்பதை அறியக்கூடிய வகையிலும் இவர்களின் ஓவியங்கள் அமைந்திருக்கிறது.

கொட்டும் மழைகளிலும் கோடை வெயில்களில் இருந்து தற்காத்துக் கொள்ள குடையின் அவசியத்தை மாணவர்கள் குடையில் வரைந்த ஓவியங்களின் மைய கருத்துகளாக தாஜ்மஹால் வரலாறு ஜப்பான் குண்டு வெடிப்பு எகிப்து மக்களின் இறப்புக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை வரலாறு கிரேக்க நாகரிகம் பேய்கள் உலாவுமிடம் ஹிட்லர் வரலாறு அலறல் உலக சுகாதார அமைப்பு சிற்ப ஓவியங்கள் பேஷன் டிசைனின் வரலாறு என எண்ணற்ற மைய கருத்துக்களை கொண்டு  ஓவியங்கள் அழகுற தீட்டியுள்ளனர்.ஓவியங்களை பார்த்தாலே என்ன வரலாறு என்று புரியும் அளவிற்கு மாணவர்களின் ஓவியங்கள் தெளிவாகவும் அழகாகவும் கண்ணைக் கவரும் பல வண்ணங்களால்  தீட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த இந்த குடை தற்போதும் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.மழை மண்ணை தொடும் முன் மங்கையின் விரல்கள் குடையை தொடும் காலமாக  இப்போது பெரும்பாலான பெண்களின் கையில் குடைகள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் இந்த மாணவர்கள்.

இவர்களின் இந்த குடை ஓவியத்திற்கு பெரிதும் துணையாக இருந்து அவர்களை வழிநடத்தியவர் அப்பேரல் பேஷன் டிசைனிங் துறையை சார்ந்த ஜி.பூபதி விஜய் உதவி பேராசிரியர் மேற்பார்வையிட்டுகல்லூரி முதல்வர் முனைவர் கே.பி. பாலகிருஷ்ணன்மேற்பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி மகிழ்ந்து ஊக்கமளித்தார்.

Tags:    

Similar News