குமரி சுற்றுலாத் தலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைய சில நாள்களே உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின. குறிப்பாக, முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனிடையே, பலத்த கோடை மழை காரணமாக, பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், சுற்றுலா தொடா்புடைய பல்வேறு தொழில்கள் முடங்கின. இந்நிலையில், தற்போது மழை தணிந்துள்ளதால் திற்பரப்பு அருவிக்கு கடந்த ஒரு வாரமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். மேலும், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைய சில நாள்களே உள்ளதால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். வரும் நாள்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.