கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் !
கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-07-08 06:08 GMT
கன்னியாகுமரியில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. பகல் 10.30 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.மேலும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.