ஏற்காடு கோடை விழா நிறைவு நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விழாவின் நிறைவு நாளான நேற்று பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 47-வது கோடை விழா-மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 5 லட்சம் வண்ண மலர்களை கொண்டு அண்ணா பூங்காவில் காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள், நண்டு, சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக்-மிக்கி மவுஸ், டாம் அன்ட் ஜெரி, டோரா-புஜ்ஜி போன்ற உருவங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இவைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கோடை விழா நிறைவு நாள் என்பதாலும், ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் நேற்று ஏற்காட்டில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும், ஏரி பூங்கா, மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, கரடியூர் காட்சி முனை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை, பக்கோடா பாயிண்ட் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.