சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் வியாபாரிகள் தவிப்பு

இரண்டு வாரத்திற்கு மேலாகியும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறாததால் கடை வியாபாரிகள் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2024-05-19 05:36 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது . சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏராளமான வணிக, வர்த்தக ,கடை நிறுவனங்களின் பயன்பாட்டில் இருந்த இடங்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது . பள்ளிபாளையத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையான பள்ளிபாளையம் காவல் நிலையம் எதிர்சாலை ஓரம் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பள்ளம் தோண்டப்பட்டது.இன்று வரையிலும் சாக்கடை கால்வாய் அமைப்பு பணிகள் நடைபெறாததால், 30க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் கூறும் பொழுது, பாலப்பணிகள் ஆரம்பித்த நாள் முதலே பள்ளிபாளையம் பிரதான சாலை பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் தவிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது கடைக்கு வெளியே சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டினார்கள். குறுகிய காலத்தில் பணிகள் முடிந்துவிடும் என கூறிவிட்டே பணிகளை தொடங்கினர். ஆனால் தற்போது 20 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித பணிகளும் தொடங்கப்படாத நிலை உள்ளது. கடை வாடகை, மின்சார கட்டணம் ,குடும்ப தேவைக்கு என அனைத்துமே கடையின் சொற்பமான வருவாய் மூலமாகத்தான் சமாளித்து வந்தோம். தற்போது கடைகள் திறக்கப்பட முடியாத நிலை இருப்பதால், மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம் . எனவே நெடுஞ்சாலை துறையினர் விரைவாக சாக்கடை கால்வாய் பணிகளை செய்து கொடுத்து சாலை வசதியை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே கடைகளை திறக்க முடியும் என்ற நிலை உள்ளது . எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News