ஓசூர் அருகே பாரம்பரிய எருதாட்டம்
ஓசூர் அருகே நரசிபுரத்தில் நடந்த பாரம்பரிய எருதாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த10,000 மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.
ஓசூர் அருகே நரசிபுரம் கிராமத்தில் நேற்று பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த எருதாட்ட விழா அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் தமிழகத்தில் ஓசூர் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன .
வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கொம்புகளில் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் தடுக்குகளை கட்டப்பட்டு கூட்டத்தில் சீறிப்பாய்ந்தது. அப்போது கூட்டத்தில் நடுவே நின்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பிடித்து அடக்கி பரிசுகளை பறித்து வீரத்தை நிலை நாட்டினர். இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் சூளகிரி ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சூளகிரி காவல்துறையினர் செய்திருந்தனர்.