மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி
பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் குவாரி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இங்கு 6 வழிச்சாலை பணிக்காக லாரிகள் மூலம் மண் எடுத்துச்செல்கிறார்கள். இதற்காக ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண் ஏற்றிச்செல்லப்படுகிறது. இதனால் பெரியபாளையம் வழியாக செல்லும் லாரிகள் ஒரே நேரத்தில் அதிக அளவில் செல்வதால் பெரியபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியில் ஆறு வழிச்சாலைப்பணிகாக பாலவாக்கம் என்ற பகுதியில் சவுடு மண் குவாரி விடப்பட்டது. இந்த குவாரிக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் வருவதால் பெரியபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க மாற்றுப்பாதையில் லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அதிக அளவு ஆழத்திற்கும் மண் எடுத்து வருகிறார்கள். அதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.