போக்குவரத்து காவல் நிலையம் பொன்னேரியில் அமைக்க எதிர்பார்ப்பு
பொன்னேரியில் அமைக்க எதிர்பார்ப்பு போக்குவரத்து காவல் நிலையம்
Update: 2024-02-19 16:39 GMT
பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் கடந்த, 1ம் தேதி முதல், சென்னை ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டு, செயல்படுகிறது. இதற்கு முன் மேற்கண்ட இரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் நடைபெறும் விபத்துகள் தொடர்பாக, உள்ளூர் போலீசாரே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டதால், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம், சென்னை மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் அமைந்து உள்ளது. இது பொன்னேரியில் இருந்து, 30 கி.மீ., தொலைவிலும், திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழவேற்காடில் இருந்து, 50 கி.மீ., தொலைவிலும் இருக்கிறது. சாலையில் நடைபெறும் விபத்து தொடர்பான சட்டநடவடிக்கை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்து, போலீசார் வருவதற்கு குறைந்தபட்சம், ஒன்றரை மணிநேரமாகும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படும். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்வற்கும், 30 - 50 கி.மீ., பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் செலவு, வீண் அலைச்சல், நேரவிரயம் ஆகியவை ஏற்படும். இதை தவிர்க்க பொன்னேரி, திருப்பாலைவனம், காட்டூர், மீஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பொன்னேரியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.