பயிற்சி மருத்துவ மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர் கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2024-05-07 14:37 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சுமதி ஆகிய தம்பதியரின் மகன் பிரவீன் ஷியாம். இவர் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று நிறைவு பெற்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் லெவர் கடற்கரைக்கு குளிப்பதற்காக கடலில் இறங்கிய போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக பிரவீன் உள்பட ஐந்து பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த பிரவீனின் உடல் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தனது சொந்த ஊரான அம்பிளிக்கையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.