தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-06-01 06:20 GMT

 சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது.

சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற 4-ந் தேதி காலை 8 மணிக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறுகிறது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 10 ஆயிரத்து 748 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும்.

இதற்காக 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் 1 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 1 வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர், 2 வாக்குகள் எண்ணும் உதவியாளர்கள் மற்றும் 1 நுண்பார்வையாளர் என தலா 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தலா 1 முகவர்களை நியமித்து கொள்ளலாம். ஒரு சுற்றுக்கு ஒவ்வொரு மேஜைக்கும் தலா 500 தபால் வாக்குகள் வழங்கப்பட்டு எண்ணப்படும்.

இந்த வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News