தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-11 09:27 GMT

மாவட்ட ஆட்சியர் 

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலை ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெவித்துள்ளதாவது.

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளிப் படிப்பின் காலஅளவு மூன்றுஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400/-கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அனைத்து மாணவ மாணவியர்களுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும் வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில்புரியவும்,

தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. திருக்கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர்களுக்கான வளாக நேர் காணல் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, தூத்துக்குடி- 2 என்றமுகவிரியிலும், தொலைபேசி எண் 9487739296 தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News