ஏடிஎம்ஐ அடித்து நொறுக்கிய வழக்கில் இருவர் கைது
ஆலங்குடி நகரின் பிரதான சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையம், வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகள் ஆகியவற்றை கடந்த இரு தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்து வந்து அரிவாளை வைத்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 30ம் தேதி மாலை அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த இருவர் அப்பகுதியில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று சிகரெட் கேட்டு வாங்கி விட்டு அதற்குக் காசு கேட்ட பெட்டிக்கடைக்காரரை திட்டியதோடு அவரின் பெட்டிக்கடையை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு தாக்கிவிட்டு எதிரே இருந்த புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் கண்ணாடியை உடைத்து விட்டு செல்லும் வழியில் இருந்த பூக்கடையையும் அரிவாளால் தாக்கி சேதப்படுத்தி விட்டு அதனை அடுத்து இருந்த துணிக்கடைக்குச் சென்று இலவசமாக உடைகள் கேட்டுள்ளனர்.
தர மறுத்த துணிக்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை திட்டிவிட்டு கடையில் இருந்த ஆடைகளை காட்சிப்படுத்தும் பொம்மைகளையும் உடைத்து விட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் யார் என்பதை அறிய அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பாவா (எ) லெனின் (22), புதுக்கோட்டை மாவட்டம் பழைய ராசாப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மகன் தயாநிதி (19) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ஆலங்குடி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இது போன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவும், வாகன சோதனையில் ஈடுபடவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.