குன்றத்துார் ஒன்றியத்தில் வடியாத மழைநீர்: மக்கள் அவதி
குன்றத்துார் ஒன்றியத்தில் வடியாத மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வடகிழக்கு பருவமழை, சில நாட்களாக வெளுத்து வாங்கியதால் ஏரி, குளங்கள் நிரம்பின. மேலும், சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று மழை நின்ற நிலையில், குன்றத்துார் ஒன்றியத்தில், மலையம்பாக்கம் ஊராட்சி மன்றம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
மாங்காடு நகராட்சி, சாதிக் நகரில் மழைநீருடன்l பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், மாங்காட்டில் இருந்து முகலிவாக்கம் செல்லும் நெடுஞ்சாலை கன மழையால் சேதமாகி பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோல, குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை இணையும் சாலை பகுதியில், 2 அடி ஆழத்திற்கு மழைநீர் மூன்று நாட்களாக தேங்கி நிற்பதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். "