பராமரிக்கப்படாத ஆஞ்சநேயர் கோவில் : போராட பொதுமக்கள் முடிவு

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் தினம் ஒருவேளை பூஜை நடக்கும் என அறிவித்த அறநிலையத்துறை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-05-03 08:46 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து தினம் ஒருவேளை பூஜை நடைபெறும் என அறிவித்த அறநிலையத்துறை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்டச் செயலாளர்.

சபரிநாதன் கூறியதாவது: குமாரபாளையம் நகர பகுதியில் உள்ள அப்புராயர் சத்திரம் எனும் மடத்திற்கு சொந்தமான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தொடர்ந்து பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கண் துடைப்பிற்காக அர்ச்சகரை நியமித்து பூஜைகள் நடைபெறும் என்று விளம்பர பலகைகள் வைத்த இந்து சமய அறநிலைத்துறை, கடந்த மாதத்தில் திருக்கோவிலுக்கு அர்ச்சகர் ஒரு கால பூஜை நடத்துவார் என்று வெளிப்படுத்தியது.இது நாடகம் என தற்போது தெரியவந்துள்ளது. திருக்கோயிலை பாதுகாப்பதற்கு, பணிக்கு வரும் பணியாளர்கள் திருக்கோயிலை பாதுகாக்க தவறும் அவல நிலை இந்து சமய அறநிலைத்துறையில் மட்டுமே நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக குமாரபாளையம் பகுதியில் உள்ள இந்த திருக்கோவில் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயில் ஆகும். கிருஷ்ண தேவராயர் வந்து வணங்கிய கோவில் எனவும் கூறப்படுகிறது.

இந்த திருக்கோயிலுக்கு தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் இத்திருக்கோயிலின் மகத்துவத்தை அறிந்து கொண்டு பெண்கள் தாய்மார்கள் இந்த திருக்கோவிலுக்கு வந்து, ஒவ்வொரு அமாவாசையும் முறையாக பூஜை புனஸ்காரம் செய்து வருகிறார்கள் இது போன்ற பழமையான திருக்கோயிலை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்த திருக்கோயிலை பாதுகாக்க தவறிய செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

மேலும் இது தவறும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். இந்த கோவிலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு வேளை பூஜை நடத்தப்படும் என அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்ட செய்தி காலைக்கதிர் நாளிதழில் கூட வெளியானது.

Tags:    

Similar News