தந்தை படித்த அரசு பள்ளிக்கு அமெரிக்க வாழ் மகன் உதவி
அமெரிக்காவில் பகுதிநேரமாக வேலை பார்த்துக்கொண்டு 12ஆம் வகுப்பு படிக்கும் மயிலாடுதுறை மாணவன், தன் தந்தை பயின்ற அரசு பள்ளிக்கு நிதி உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே கொற்றவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரி இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தொழிலதிபரான பாரி- இமயமதி தம்பதியரின் மகன் அஸ்வந்த் அமெரிக்காவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பகுதி நேரமாக வேலை பார்த்து பணத்தை சேமித்து வந்துள்ளார். தாயார் இமயமதியுடன் தனது சேமிப்புத் தொகையை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை வந்து தன் தந்தை படித்த பள்ளியான மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார் .
அவரது தந்தை பாரி படித்த கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1989ஆம் ஆண்டு தனது தந்தையுடன் கல்வி பயின்ற மாணவர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் ஏழை, மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 65 ரூபாய் கல்வி உதவிதொகையாகவும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாணவர்களுக்கான பை மற்றும் பள்ளிக்கு 23 ஆயிரம் மதிப்பில் நவீன ஒலிப்பெருக்கி கருவியையும் வழங்கினார்.
தந்தையின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பகுதி நேரம் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை கொண்டு தந்தை படித்த பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அமெரிக்க அமெரிக்க வாழ் தமிழக மாணவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியர்கள், நகர்மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.