ஊத்தங்கரை வனப்பகுதியில் 52 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் -இருவர் கைது
ஊத்தங்கரை அருகே கல்லாவி வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி வனச்சரக ஆளுகைக்கு உட்பட்ட கல்லாவி மற்றும் ஊத்தங்கரை வன பகுதிகளில் ரோந்து செல்வதற்காகவும் வனவிலங்கு குற்றத்தை தடுப்பதற்காகவும் வனச்சரக அலுவலரின் உத்தரவின்படி தனி குழு அமைக்கப்பட்டு தீபாவளி முதல் சிறப்பு ரோந்து பணிகள் வனப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஊத்தங்கரை வனவர் சுபாஷ், தலைமையில் கல்லாவி வனவர் முருகேசன்,மற்றும் வனக்காப்பாளர்கள் பரமசிவம், மணிகண்டன், கிருஷ்ணன், உள்ளிட்ட குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாலை 5 மணிக்கு கல்லாவி வன பிரிவு ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிப்பட்டி பீட் பெரிய பொம்பட்டி மாட்டு வழி சரகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடும் நபர்கள் உலாவுவதை கண்டறிந்தனர். அந்த வழியே வந்த இரண்டு நபர்களை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் போச்சம்பள்ளியை அடுத்த வாலிபட்டியை சேர்ந்த கதிர்வேல் (26), வினோத் (20) என்பது தெரியவந்தது. இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து வனவிலங்குகளை வேட்டையாட 20 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் பையை சோதனை செய்ததில் அதில் மேலும் 32 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து கல்லாவி வனவர் முருகேசன் ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டுகளை பயன்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.