கோமாரி நோய்க்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு: தஞ்சை ஆட்சியர்
கோமாரி நோய்க்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே, திருமலைசமுத்திரம் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
கோமாரி நோய் தடுப்பு முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. கால்நடைகளில் ஏற்படும் கோமாரி நோய் ஒருவகை வைரஸ் நச்சுக் கிருமியால் ஏற்படும் கொடிய நோயாகும். இந்த வகை நோய்க்கு சிகிச்சை கிடையாது.
தடுப்பூசி மட்டுமே ஒரே மருந்தாகும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவதுடன், சினைப்பிடிப்பதில் தாமதம் ஏற்படும். மேலும் இளைப்பு ஏற்படுவதால் எருதுகளில் வேலைத்திறன் குறைகிறது. இளங்கன்றுகளுக்கு இந்நோய் ஏற்படின் 100 விழுக்காடு இறந்து விடும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி அளிப்பதே சிறந்ததாகும்.
இப்பணியானது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடந்தால் மட்டுமே 100 விழுக்காடு கோமாரி நோயினை முற்றிலும் ஒழிக்க முடியும். கோமாரி நோய்த் தடுப்பூசி ஜூன் மாதம் 10-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை (10.06.2024 முதல் 01.07.2024 வரை) தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு,
உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை ஒத்துழைப்புடன் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் நடத்தப்பட உள்ளது. இத்தடுப்பூசிப் பணிக்கான உத்தேச செயல்திட்ட அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10 வரை தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி அளிக்கப்படும் இடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படும். இத்தடுப்பூசி பணி அனைத்து மக்களை சென்றடையும் வகையில் அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் அனைவரும் தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்,
ஒலிபெருக்கி விளம்பரம் மற்றும் விளம்பர நோட்டீஸ் வாயிலாக கோமாரி நோயினை பற்றியும், தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளிக்க கேட்டுக்கொள்கிறேன்" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் மரு.கார்த்திகேயன், துணை இயக்குநர் மற்றும் தீவன அபிவிருத்தி
இனப்பெருக்கம் மரு.சுப்பையன், உதவி இயக்குநர் (நோய் புலனாய்வு பிரிவு) மரு. தெய்வவிருதம், உதவி இயக்குநர் மரு.சரவணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அருளானந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராசசேகரன், உலகநாதன், கால்நடை உதவி மருத்துவர்கள் முகமது ஷெரிப், வேல்முருகன், சுகன்யா, தாமோதர செல்வம், ஆல்வின் நிஷாந்த், கோகுல், கால்நடை ஆய்வாளர்கள்மஞ்சுளா மாலதி, ராஜேஸ்வரி,
கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்புலட்சுமி, இளங்கோவன், கால்நடை கருவூட்டாளர் கண்ணன், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.